தமிழ்நாடு

விமான நிலையம்: தாலியை கழற்ற சொன்ன சுங்கத்துறை அதிகாரிகள்!

Malaimurasu Seithigal TV

மலேசியாவில் இருந்து வந்த போது தாலியை கழற்ற சொல்லி சுங்கத்துறை அதிகாரிகள் வற்புறுத்தியதாக சமூக வலைதளத்தில் பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை  பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து ஒரு தம்பதி ஆன்மீக சுற்றுலா வந்து உள்ளனர். அவர்கள் சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை முடிந்ததும் உடமைகளை எடுக்க சுங்க பகுதிக்கு வந்த போது சுங்க விதிகளின் படி இல்லாமல் கூடுதல் நகைகளை அணிந்து வந்து உள்ளீர்கள். அவற்றை கழுற்றி தாருங்கள் என கூறி உள்ளனர். உடனே அந்த பெண் நான் தாலி அணிந்து இருக்கிறேன். அவற்றை கழுற்றி தர முடியாது என கூறி வாக்குவாதம் செய்து உள்ளார். பின்னர் அவரது கணவரின் நகைகளை வாங்கி கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் மலேசியாவிற்கு திரும்பி செல்லும் போது நகைகளை வாங்கி கொள்ளுங்கள் என தெரிவித்து விட்டனர். 

இந்த நிலையில் அந்த பெண் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு உள்ளார். அதில் "திருப்பதி, திருத்தணி உள்பட கோவில்களுக்கு செல்ல மலேசியாவில் இருந்து வந்தோம். ஆனால் சென்னை விமான நிலையத்தில்  இரண்டரை மணி நேரம் சுங்க இலாகா அதிகாரிகள் எங்களை அலைக்கழித்தனர். 
கழுத்தில் அணிந்து இருந்த தாலியை கழுற்ற சொன்னார்கள். நான் வாக்குவாதம் செய்ததால் கணவரின் நகைகளை வாங்கி கொண்டனர். எவ்வளவு நகைகள் கொண்டு வர வேண்டும் என்பது எங்களுக்கு தெரியாது" எனக் கூறி உள்ளார். 

சுங்க விதிகளின்படி அளவுக்கு அதிகமான நகைகளை அணிந்து வந்தால் உரிய அனுமதி அறிக்கையை தர வேண்டும். ஆனால் எதுவும் தராமல் கொண்டு வந்ததால் நகைகளை வாங்கி வைத்து கொண்டதாகவும் திரும்பி செல்லும் போது பெற்று செல்ல அறிவுறுத்தப்பட்டதாகவும் சுங்க இலாகா அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.