தமிழ்நாடு

அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான காற்று மாசு...! சென்னை மக்கள் உஷார்...! 

Malaimurasu Seithigal TV

சென்னையில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகரித்திருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நேற்று மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. அதற்காக 3,500 கிலோ நெய் தயார் நிலையில் வைக்கப்பட்டு தீபம் ஏற்றுவதற்கு தாமிரத்தால் ஆன ஐந்தரை அடி உயரமுள்ள புதிய மகா தீப கொப்பரை பயன்படுத்தப்பட்டது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலை மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிப்படுவர். மேலும், தீபாவளி பண்டிகை போலவே பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவார்கள். அதனால் நேற்றைய தினம் மாலை சென்னையில் அனேக பகுதிகளில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடப்பட்டதால், பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. 

இந்த நிலையில், சென்னையில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஒன்றரை மடங்கு அதிகம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கார்த்திகை தீபம் பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதில் சென்னையில் 7 இடங்களில் காற்று மாசு அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. 
காற்றின் தரக்குறியீடு படி, சென்னையில் அதிகபட்சமாக, 
> ஆலந்தூர்- 320
> பெருங்குடி- 278
> மணலி- 171
> ராயபுரம் - 237
> அரும்பாக்கம்- 210
> கொடுங்கையூர்-154
> எண்ணூர் - 243  
என்ற அளவீட்டில் காற்று மாசு பதிவாகியுள்ளது.

காற்று மாசு 0-50 ஆக இருந்தால் நல்ல நிலையில் சுவாசிக்க ஏற்றது, 51-100 வரை இருந்தால் ஏற்கனவே சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும், 100-200 வரை இருந்தால் ஆஸ்த்மா நோயாளிகளுக்கு சுவாச பிரச்சனை ஏற்படும், 201-300 வரை இருந்தால் காற்றின் தரம் மோசமாக இருப்பதாகவும் தொடர்ந்து சுவாசித்தால் நுரையீரல் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம், 301 - 500 வரை இருந்தால் காற்றின் தரம் படு மோசமாக இருப்பதாகவும் சுவாசிக்க உகந்த காற்று இல்லை, ஆரோக்கியமான மனிதர்களையும் கடுமையாக தாக்கும் என்பதாகும். 

சென்னையில் ஒட்டுமொத்தமாக மற்ற நாளில் 80 வரை இருக்கும் நிலையில் நேற்று 320 என காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது. நகரில் தற்போது காற்றின் தரம் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதால், தற்போது பலரும் கவலை அடைந்துள்ளனர்.