நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்ட அனைத்து இடத்திலும் தோல்வியடைந்தது. ஏழு தொகுதிகளில் டெபாசிட்டை இழக்கும் அளவுக்கு அ.தி.மு.க. வீழ்ச்சியடையும் என மக்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
தேர்தல் தோல்வி குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொகுதி வாரியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டிருந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேனி, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட சில தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க வேண்டும் என குரல் எழுப்பினர்.
சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும், அவர்களின் ஆதரவாளர்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும், கூட்டணிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள்தான் தோல்விக்கு காரணம் என்றும் ஆலோசனைக்கூட்டத்தில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் கடும் அப்செட்டான எடப்பாடி பழனிசாமி, ஆகஸ்ட் 9-ம் தேதியன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிரடியாக அறிவித்திருந்தார். ஆனால் திடீரென மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு நேரடியாக அவசர செயற்குழு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
ஆகஸ்ட் 16ம் தேதி, அதாவது நாளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் வைத்து அவசர செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, போக்குவரத்து துறைக்கு எதிரான குற்றச்சாட்டு என பல்வேறு கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்த தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், செம்மலை ஆகியோர் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் யாரும் கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்றோ, சசிகலா, தினகரனை இணைக்க வேண்டும் என்றோ வாயைத் திறக்கக்கூடாது.
குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக யாராவது பேசினால் கடுமையான நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் வைகை செல்வனிடம் கேட்டதற்கு, தீர்மானங்கள் போடப்பட்டிருப்பது என்னவோ உண்மைதான், ஆனால் பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி முடிச்சுக்களை அவிழ்த்துள்ளார்.
வைகை செல்வனின் பேச்சை கவனிக்கும் பொழுது, கட்சியை ஒன்றிணைத்தல் என்ற பேச்சுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் செயற்குழுக்கூட்டம் குறித்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை சேர்ந்த புகழேந்தியிடம் கேட்டபோது, செயற்குழு கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பில்லை என கூறுகிறார்.
அ.தி.மு.க.வில் தொண்டர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் மட்டுமல்லாமல் தி.மு.க., பா.ஜ.க. கட்சி நிர்வாகிகளுமே இந்த செயற்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை உற்று நோக்கி வருகின்றன.
காரணம், தி.மு.க., பா.ஜ.க. இந்த இரண்டு கட்சிகளையுமே எதிர்த்து தீர்மானங்களை நிறைவேற்ற காத்திருக்கிறது அ.தி.மு.க.. இதனால் நாளை நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
மாலைமுரசு செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் சரண்குமார் மற்றும் பிருதிவிராஜூடன் செய்தியாளர் ராஜேஷ்.