புதுச்சேரியில் அரசு பணியில் உள்ள பெண்களுக்கு 2-மணி நேர தளர்வு அளித்த விவகாரத்தில் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் விதத்தில் பேசும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அக்கட்சியின் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், "காரைக்காலில் உள்ள நல்லம்பள்ளி ஏரியை ஆழப்படுத்த அந்த மண்ணை எடுத்து ரயில்வே பணிக்கு பயன்படுத்தும் திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்தார். அந்த திட்டத்தில் தற்போது பல கோடி ரூபாய் ஊழல் நடந்து வருகிறது. அந்த இடத்தில் 30லிருந்து 40 அடி வரை பெரிய ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண்ணை தோண்டி வருகின்றனர். இதில் மிகப்பெரிய கொள்ளை நடைபெற்று வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கக்கூடிய ஒரு அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர்கள் ஆகியோர் மண் வாரப்படுவது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி மண் எடுப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் "20 மாத கால ஆட்சியில் முதலமைச்சர் ரங்கசாமியால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் 70 சதவீதம் நிறைவேற்றியுள்ளதாகவும். அப்படி இல்லை என்று கூறும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி என்னுடன் ஒரே மேடையில் இதுகுறித்து விவாதிக்க தயாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.
கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஒரு புதிய திட்டத்தை கூட செயல்படுத்தவில்லை.
அமைதியாக இருக்கும் புதுச்சேரி மாநிலத்தில் இந்த 2 மணி நேரம் பணி தளர்வின் போதும், முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு ஏன் அறிவிக்கவில்லை என கூறி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மத கலவரத்தை தூண்டுகிறார். உண்மையில் அரசு துறையில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் 2 மணி நேரம் பணி தளர்வை அரசு அறிவித்துள்ளது. இதுபோன்று மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் விதத்தில் பேசும் திமுக, காங்கிரஸ் கட்சியினர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிக்க:பதவி இழக்கும் அமைச்சர்கள்...! யார்? யார்?