தமிழ்நாடு

”அதிமுக மட்டுமே காரணமில்லை........” பழனிவேல் தியாகராஜன்!!

Malaimurasu Seithigal TV

சென்னை ஆர்கே சாலையில் உள்ள தனியார் விடுதியில் 2030 ஆம் ஆண்டுக்குள் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கியும் இதை ஏதுவாக்கும் சுழலமைப்பை உருவாக்குதல் என்ற தலைப்பில் 
அசோசேம் தமிழ்நாடு மாநில வளர்ச்சி கவுன்சில் நடத்தும் கருத்தரங்கை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்துள்ளார்.

கருத்தரங்கம்:

கொள்கை சூழல், உட்கட்டமைப்பு மற்றும் லாஜிஸ்டிக்ஸ், வலுவான கடன் அணுகு வசதி மற்றும் வளங்களுக்கு ஏதுவாக்கும் சூழல் அமைப்பை உருவாக்குவது, திறனளிப்பு கொள்முதல் மற்றும் உள்ளீடுகளை சிறப்பாக ஆக்குதல், சாதகமான சந்தை மற்றும் தேவைநிலைகள் மற்றும் இணைப்பு வசதி உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளன. 

கருத்தரங்கை துவக்கி வைத்து சிறப்புரையாற்றிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில் :-

கட்டுப்பாட்டில் இல்லை:

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக மாற்றுவதில் உலக பொருளாதார நிலையின் பங்கும் இருக்கிறது என்றும் அதன் இலக்கை அடைய பல்வேறு காரணிகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நல்ல முன்னேற்றம்:

கடந்த 1.5 ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதாரம் தற்போது சராசரியான நிலைக்கு திரும்பி இருக்கிறது எனவும் மாநிலத்தில் கடந்த பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் அதன் தொடர்ச்சி தான் நான் முதல்வன் போன்ற திட்டங்கள் எனவும் கூறியுள்ளார்.

பல்வேறு காரணங்கள்:

2006 முதல் 2011 காலகட்டத்திற்குப் பிறகு 2011 முதல் 2020 ஆம் ஆண்டு தொடக்கம் வரை மாநிலத்தின் ஜிடிபி என்பது 23.7 சதவீதத்திலிருந்து 11.5 சதவீதமாக குறைந்தது என்றும் அதிமுக ஆட்சி என்பது மட்டுமல்லாமல் அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு காரணங்கள் இதற்கு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 

புதிய வழிகள்:

கடந்த ஆண்டு பட்ஜெட் போல இந்த பட்ஜெட்டிலும் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருக்காது எனவும் வளர்ச்சியை அடைய புதிய வழிகளை இன்று தேட வேண்டும் என்றும் இம்மாதிரியான கருத்தரங்கங்கள் அதற்கு முக்கிய வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.

-நப்பசலையார்