தேர்தல் தோல்வி பயத்தில் அ.தி.மு.க பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அதேசமயம், வேட்பாளர்களும் மக்களோடு மக்களாக இணைந்து வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
இப்படி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக அதிமுக தரப்பில் புகார் தெரிவித்து வருகின்றனர். அதாவது, வாக்காளர்கள் கைகளில் வைக்கும் மை அழிவதாகவும், வாக்களிக்கும் இயந்திரங்களில் ஒரு கட்சியின் பொத்தானை அழுத்தினால், வேறொரு கட்சியின் பொத்தானில் லைட் எரிவதாகவும் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருப்பதாகவும், பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் கை சின்னம் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து அதிமுக தேர்தல் தோல்வி பயத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக அமைச்சர் கே.என்.நேரு குற்றம் சாட்டினார்.