சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொற்கிளி:
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியின் 100 மூத்த முன்னோடிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் பொற்கிழியும் வேட்டி சேலைகளையும் வழங்கினார்.
சேப்பாக்கம்:
நிகழ்ச்சியை தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 300 நிகழ்ச்சிக்கு மேல் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது எனவும் நான் எத்தனை நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி எனது மனதுக்கு நெருக்கமான நிகழ்ச்சி என்றும் கூறினார்.
மூத்த முன்னோடிகள்:
மேலும் கழகத்தின் மூத்த முன்னோடிகள் இல்லையென்றால் கட்சி இல்லை எனத் தெரிவித்த அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் நிற்பேனா என்று நானே குழப்பத்தில் தான் இருந்ததாகவும் வீடு வீடாக சென்று கொரோனா நிவாரண பொருட்களும்,தடுப்பூசி செலுத்தியதில் இந்தியாவிலேயே சேப்பாக்கம் தொகுதியில் தான் அதிகம் எனவும் தெரிவித்தார்.
செல்லப்பிள்ளை:
தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டில் நான் எங்கு சுற்றினாலும் கடைசியில் இங்கு தான் வர வேண்டும் எனவும் நான் என்றும் சேப்பாக்கம் தொகுதியின் செல்லபிள்ளை என கூறினார். மேலும் இந்தியாவிலேயே இது போன்று கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடத்தியது இல்லை எனவும் பல இடங்களில் பட்டப்பெயராக சின்னவர் என கூறுவதில் எனக்கு ஆர்வமும் இல்லை நம்பிக்கையும் இல்லை எனவும் பேசினார்.
டிக்கெட் கிடைத்தால்..:
அதனைத் தொடர்ந்து நாளை நடைபெற உள்ள போட்டியை காண்பதற்கு நானும் ஆர்வமாக உள்ளேன் எனவும் டிக்கெட் கிடைத்தால் எனக்கு சொல்லுங்கள் எனக் கூறிய உதயநிதி நானும் போட்டியை காண முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் எனவும் ஆனால் டிக்கெட் தான் கிடைக்கவில்லை எனவும் நகைச்சுவையாக பதிலளித்தார்
கேவலமான ஆட்சி:
நீட் ரகசியத்தை வெளியிட்ட உதயநிதிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக கேட்ட கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி சில இடங்களில் காமெடியாக பேசுவதாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார் எனவும் நீட் தேர்வு சட்ட மசோதாவை டெல்லிக்கு அனுப்பி அதை இரண்டு முறை திருப்பி அனுப்பியதை மக்களிடம் சொல்லாத கேவலமான ஆட்சி அதிமுக எனவும் கூறினார்.
பதிலளிப்பாரா?:
நீட் விவகாரத்தில் திமுக எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பதை நாங்கள் மக்களிடம் தெளிவாக கூறுகிறோம் எனவும் ஆளுநர் மாளிகை முன்போ அல்லது மத்திய அரசுக்கு எதிராக போராட்டமோ நடந்தால் வந்து கலந்து கொள்ள அவருக்கு தைரியம் உள்ளதா எனவும் கேள்வியெழுப்பினார் உதயநிதி. மேலும் அதற்கு அவர் (எடப்பாடி பழனிச்சாமி) பதிலளிக்கட்டும் அதன் பின்னர் நான் பதில் கூறுகிறேன் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்றா...!!