அமைச்சர் மனோ தங்கராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசாரை ஏவி விட்டு பயமுறுத்துவாக அதிமுக நிர்வாகி ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த சுங்கான்கடை பகுதி, ஆளூர் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவரும், ஆளூர் தொடக்க வேளாண்மை சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஆளுர் பேரூர் அதிமுக செயலாளருமான லதா சந்திரன் என்ற அதிமுக பெண் நிர்வாகியை மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தின் முதல் பெண் பேரூர் கழக செயலாளராக நியமித்திருந்தார்.
இந்நிலையில் அவரது வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென உள்ளே நுழைந்து சுமார் 7 மணி நேரம் சோதனை செய்தனர். இதில் எந்த ஒரு ஆவணங்களும், பணம், நகை எதுவும் கிடைக்கவில்லை என திரும்பிச் சென்றனர். இதுகுறித்கு செய்தி பரவிய நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும்,கழக அமைப்புச் செயலாளருமான தளவாய்சுந்தரம் நேரில் சென்று சந்தித்து விவரத்தை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து அதிமுக ஆளூர் பேரூர் நிர்வாகி லதா சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பல்வேறு பொறுப்புகளை தான் வகித்ததாகவும், எந்த ஒரு முறைகேடுகளிலும், இதுவரை ஈடுபட்டதில்லை. இப்பகுதி மக்களிடம் எனக்கென்று நல்ல பெயர் உள்ளது. இதை கெடுப்பதற்காக உள்ளூர் அமைச்சர் மனோ தங்கராஜ் அதிமுக நிர்வாகிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் என்னையும் இணைத்துக் கொண்டு இது போன்ற அடக்குமுறைகளை செய்து வருகிறார்.
கடந்த காலத்தில் ரவுடிகளை ஏவி வீட்டை அடித்து உடைத்தனர். தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரை ஏவி விட்டு பயமுறுத்தி வருகிறார். ஆனாலும் இதுவரை போலீசார் எந்த ஒரு முறையற்ற ஆவணங்களோ,பணம் நகையோ எடுத்து செல்லவில்லை. ஆகவே அதிமுக நிர்வாகிகளை பழிவாங்கு நடவடிக்கை கைவிட வேண்டும். எனக்கு கழக பணியை செய்வதற்கு இடையூறு செய்து வரும் அமைச்சரும், திமுகவினரும் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிக்க:மதுரை, கோவையில் மெட்ரோ ரயில்; விரிவான திட்ட அறிக்கை தாக்கல்!