தமிழ்நாடு

பெரும் குழப்பங்களுக்கிடையே நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்....

Malaimurasu Seithigal TV

அதிமுகவில் உச்சபட்ச குழப்பம் நீடிக்கும் நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைப்பெறுகிறது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர்., மாளிகையில் இன்று மாலை 4.30 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.

இரு அணிகள்:

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என்று தனித்தனி அணிகள் உருவாகியுள்ள சூழலில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார்.

உறுப்பினர்களுக்கு...:

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைப்பெறும் இந்தக் கூட்டத்தில், 17-ம் தேதி கூட உள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பிரதானமாக விவாதிக்கப்படுகிறது. அதன்படி, தொகுதி மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொண்டு வர அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எடப்பாடி கடிதம்:

மேலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி, அவருக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரையும், துணை கொறடா பதவியிலிருந்து மனோஜ் பாண்டியனை நீக்கி, அதற்கு பதிலாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்துள்ளதாக சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ள நிலையில், அதுகுறித்து இதுவரை சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. வரும் 17-ம் தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், சபாநாயகரின் முடிவு என்னவாக இருக்கும், முடிவெடுக்காமல் இருந்தால் என்ன செய்யலாம் என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் பேசப்பட உள்ளது.

சபாநாயகருக்கு கடிதம்:

அதேவேளையில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவியில் தாம் தொடர்வதாக ஓ.பன்னீர்செல்வமும் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ள சூழலில், தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்பார்த்து, ஓ.பன்னீர்செல்வத்தை பதவியில் இருந்து நீக்காமல் இருக்கும் பட்சத்தில், ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் ஆகியோர் சட்டமன்றத்துக்கு வருகை தரும் போது அவர்களை கையாள்வது எப்படி என்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொன்விழா:

அதேபோல் அக்டோபர் 17-ம் தேதி வரக்கூடிய அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பரவலாக பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்துதல், அரசு தொடுக்கும் வழக்குகளில் கட்சி சார்பில் ஆஜராக ஏதுவாக வழக்கறிஞர் குழுவை மாற்றி அமைத்தல், புதிய நிர்வாகிகள் நியமனம், தேவர் குருபூஜையில் தங்கக்கவசம் பெறும் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.