நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், செயற்குழு கூட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். வழக்கமாக அதிமுகவின் செயற்குழு,பொதுக்குழுக் கூட்டம் ஆண்டின் இறுதியில் நடத்தப்படும். ஆனால், 2021 பேரவைத் தேர்தலைகருத்தில் கொண்டு, அதிமுக செயற்குழுக் கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி நடத்தப்பட்டது. வரும் டிசம்பரில் 2-வது செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. ஆனால், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவின் காரணமாக அந்த பதவி காலியாக உள்ளதால், செயற்குழுவை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .எனவே, அப்பதவிக்குத் தகுதியான நபரை தேர்வு செய்வது தொடர்பாகவும் முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்குகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கட்சியின் வேட்பாளர்களை எவ்வாறு தேர்வு செய்வது?, ஒரே இடத்துக்கு பலர் போட்டியிட விருப்பம் தெரிவித்தால், எந்த முறையில் அணுகுவது? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா விவகாரம் குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.