தமிழ்நாடு

"பாஜகவின் அடிமை பிடியிலிருந்து அதிமுகவால் விலக முடியாது" ஜவாஹிருல்லா பேட்டி!

Malaimurasu Seithigal TV

பா.ஜ.க வின் கடும் அடிமை பிடியிலிருந்து அ.தி.மு.கவால் விலகி வர முடியாது என தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டியளித்துள்ளார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைமை நிர்வாக குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தலைமையில் இக்கூட்டமானது நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். தமிழ்நாடு சட்டபேரவையில் பல முறை இது குறித்து பேசி உள்ளோம். ஆனாலும், 37 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

கலைஞர் முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தின் கவனத்தை ஈர்த்த வழக்குகளில் பலர் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். அதேபோல தற்போதைய அரசும் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையில் கவனம் செலுத்தி இது குறித்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜீலை 9 ஆம் தேதி கோவை மத்திய சிறைச்சாலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றவுடன் அவர்கள் அளித்த பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக குறிப்பிட்ட அவர், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு முஸ்லீம் சிறைவாசைகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் பாசிசத்திற்கு ஆதரவாகவும் மதச்சார்பின்மைக்கும் ஜனநாயகத்திற்கும் எதிராகவும் அரசியலமைப்புச் சட்டத்தையே மதிக்காத பாஜகவையும் அவர்களுடன் கூட்டணி வைப்பவர்களையும் ஒன்று சேர்ந்து முறியடிக்கும் எனத் தெரிவித்துள்ளார். 

அதிமுக பாஜக கூட்டணியில் ஏற்பட்டு வரும் கருத்து முரண்பாடுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருந்து பிரிவார்கள் என கூறுவது நாடகம்தான். பாஜகவின் கடும் பிடியிலிருந்து, கொடும்பிடியிலிருந்து, அடிமை பிடியிலிருந்து அதிமுகவால் விலகி வர முடியாது என பதிலளித்துள்ளார்.