தமிழ்நாடு

வடமாநில தொழிலாளர்களை விட்டுவிட்டு, பிரதமர் மோடிக்கு எதிராக போராடுவதே சரியாக இருக்கும் - திருமாவளவன் !

Tamil Selvi Selvakumar

வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக போராடுவதை விட, பிரதமர் மோடிக்கு எதிராக போராடுவதே சரியானதாக இருக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம்,  பரமக்குடியில், இமானுவேல் சேகரன் பேரவை பொதுச்செயலாளர் சந்திரபோஸின் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவரிடம், தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் வடமாநிலத்தவர் செய்திகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு முதலீட்டு வடிவில் தமிழ்நாட்டில் நடைபெற்று வருவதாக கூறியவர், கூலி வேலைக்கு வரும் வடமாநிலத்தவர்களை அடித்து விரட்டுவோம் என கூறுபவர்கள் உண்மையான தமிழர்களாக இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், வேலை வாய்ப்பின்மையால் வட மாநில தொழிலாளர்கள் கூலி வேலைக்கு தமிழகம் வருகின்றனர் என்றால், அந்த வேலை வாய்ப்பின்மைக்கு பொறுப்பேற்க கூடியவர் பிரதமர் நரேந்திர மோடி தான். அதனால், வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக போராடுவதை விட்டு விட்டு, பிரதமர் மோடிக்கு எதிராக போராடுவது தான் சரியானதாக இருக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.