ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று நாட்களுக்குப் பின் கடலுக்கு சென்ற நிலையில், இலங்கை கடற்படையினர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, அவர்களை விரட்டி அடித்ததால் உயிர் பயத்துடன் கரை திரும்பினர்.
கடந்த 13-ந் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற மீனவர்கள் 17 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்ததுடன், அவர்களின் 3 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தது. இதனை கண்டித்து, கடந்த 15-ந் தேதி முதல் 17ஆம் தேதி வரை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அனுமதி சீட்டு கிடைத்ததை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
இதையும் படிக்க : ”4,000 சட்டங்கள் அமல்படுத்தப்பட்டது இங்கேதான்” - பிரதமர் மோடி
இந்நிலையில், தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்தனர். இதனால், 3 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள், உயிர் பிழைத்தால் போதும் என மீன்களை பிடிக்காமல் வெறுங்கையுடன் கரை திரும்பி உள்ளனர்.