தமிழ்நாடு

  ” மருத்துவத்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது;  - மு.க. ஸ்டாலின்.

” சாதனை மாரத்தான், சமூக நீதி மாரத்தானாக மாறியுள்ளது “.

Malaimurasu Seithigal TV

திருநங்கைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கியதன் மூலம் சாதனை மாரத்தான் சமூக நீதி மாரத்தான் ஆக மாறி உள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி திமுக சார்பாக சென்னை, காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் இருந்து கலைஞர் பன்னாட்டு மாரத்தான் இன்று காலை நான்கு மணி அளவில் தொடங்கியது.

மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் இருந்து தீவுத்திடல் வரை மூன்று தூரங்களில் வெவ்வேறு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. அதிகாலை 5.30 மணியளவில் 21 கி.மீ, 10 கி.மீ, 5 கி.மீ என மற்ற 3 பிரிவுகளில் நடைபெறும் மாரத்தான் ஓட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து,  42 கி.மீ பிரிவில் நடைபெறும் மாரத்தான் ஓட்டத்தை நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். 

1,063 திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் உட்பட மாரத்தானில் 73 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

மாரத்தானில் பங்கேற்கும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு ஊக்கத்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. மாரத்தானில் பங்கேற்பவர்கள் அதிகாலை 3.30 மணி முதல் பகல் 12 மணி வரை மெட்ரோ ரயிலில் இருமுறை கட்டணமில்லாமல் பயணிக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

மாரத்தான் ஓட்டத்திற்கு பெறப்பட்ட முன்பதிவுக் கட்டணம் ரூ.3 கோடியே 42 லட்சம் வசூல் ராயப்பேட்டை மருத்துவமனையில் புற்றுநோய் கட்டடம் கட்டப்படுவதற்கு வழங்கப்பட உள்ளது.

மாரத்தானில் வெற்றி பெறுபவர்களுக்கு 9 பிரிவுகளில் மொத்தம் 10,70,000 ரூபாய் பரிசை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலை மணிக்கு வழங்கினார்.  தமிழ்நாட்டினர் மட்டுமல்லாது வெளிநாட்டினர், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

 73,206 பேர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டதால், கின்னஸ் சாதனை வழங்கப்படுகிறது.

மேலும், லண்டனில் இருந்து வந்த கின்னஸ் குழுவினர் Longest Running race என்கிற பிரிவில், முதலமைச்சரிடம் சான்றிதழை வழங்கினர்.

 ’அபிஷேக் சேனி’  என்ற வீரருக்கு முதல்வர் முதல் பரிசு வழங்கினார் .

அதன் பின்னர் மேடையில்  பேசிய முதல்வர்:- 

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இன்று நடந்த மாராதான் சாதனை இடம் பெற்றுள்ளது.  மாரத்தான் போட்டியின் மூலமாக பதிவு தொகையாக வந்த 3 கோடியே 42,500 ரூபாய் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வழங்கப் படுகிறது.

கின்னஸ் சாதனை படைத்து, கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருகிறோம்.  செயல்படுவதில் ஒரு மாராதான் அமைச்சர் தான் மா.சுப்பிரமணியன். மா.சுப்பிரமணியன் என்றால் மாரத்தான் சுப்பிரமணியன் என அறியப்பட்டு இருக்கிறார். 

விழாக்களில் தனக்கென  ஒரு முத்திரை பதிக்க கூடியவர்;   மா.சுப்பிரமணியன் அளவிற்கு யாரும் ஓட முடியாது.  என்னால், உதயநிதியால், பொன்முடியால் கூட ஓட முடியாது.  ஆட்ட நாயகன் கேள்வி பட்டிருப்போம், இவர் ஓட்ட நாயகன்.

நான் மேயராக இருக்கும் போது, எந்த அளவிற்கு பாராட்டை பெற்றெனோ, அதே போல் மா.சு -வும் சிறப்பாக மேயராக பணியாற்றினார்.  மருத்துவத்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

 திருநங்கை பங்கேற்பாளருக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம்,  சாதனை மாரத்தான், சமூக நீதி மாரத்தானாக மாறியுள்ளது.   தம்பி உதயநிதி அமைச்சரான பிறகு விளையாட்டு துறை எழுச்சி பெற்றுள்ளது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்”, எனத் தெரிவித்தார்.