தமிழ்நாடு

காலமானார் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்...

Malaimurasu Seithigal TV

அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.


மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொடங்கி சமகாலத்திலும்  அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் அவைத்தலைவர் மதுசூதனன். 1950 களில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்த மதுசூதனன் "இதயக்கனி" என்ற எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தை தொடங்கி அதன் தலைவராகவும் இருந்தார். அதிமுகவின் தீவிர விசுவாசியான மதுசூதனனுக்கு "அஞ்சா நெஞ்சன் " என்ற பட்டத்தை வழங்கி அவரை எம்.ஜி.ஆர் பெருமைப்படுத்தினார்.

அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றத்தில் மாவட்ட மற்றும் மாநில அளவில் பொறுப்பு, சென்னை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை மதுசூதனன் வகித்துள்ளார். 1991ம் ஆண்டில் அதிமுக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய ஜெயலலிதா,  வெற்றிபெற்ற மதுசூதனனுக்கு கைத்தறித்துறை அமைச்சர் பதவியையும் வழங்கினார்.

மதுசூதனன் சாகும் வரை அவர் தான் அதிமுகவின் அவைத்தலைவர் என ஜெயலலிதா கூறியிருந்தது அவர் மீது ஜெயலலிதா வைத்திருந்த நம்பிக்கையை அறிந்து கொள்ள முடிந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சென்ற கட்சியின் மூத்த நிர்வாகி மதுசூதனன் தான்.  மதுசூதனன் தலைமையிலான அணிக்கு தான் இரட்டை இலை சின்னம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.

2017ல் ஆர்.கே.நகர்  இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பாக வேட்பாளராகவும் மதுசூதனன் அறிவிக்கப்பட்டிருந்தார் ( பின்னர் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது ) . எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கு பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட மதுசூதனன் தோல்வியை தழுவினார்.

கட்சியின் மூத்த முன்னோடியான மதுசூதனன் சுமார் அறை நூற்றாண்டு காலம் அதிமுகவுடன் ரத்தமும் சதையுமாக இருந்திருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இபிஎஸ் அணி மற்றும் ஒபிஎஸ் அணி என 2-ஆக பிரிந்த போது தர்மயுத்தம் நடத்திய ஒ.பன்னீர்செல்வத்திற்கு முதலில் ஆதரவு அளித்தவர் மதுசூதனன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் கடந்த ஜீலை மாதம் மதுசூதனனுக்கு, திடீரென மூச்சுத்திணறல் பிரச்சினையை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 
தொடர்ந்து கிசிச்சை பெற்று வந்த நிலையில் இன்று  பிற்பகல் 3.42 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.