தமிழ்நாடு

சொத்து குவிப்பு வழக்கில் தீபா தரப்பில் தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு...!

Malaimurasu Seithigal TV

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை உரிமை கோரி தீபா தரப்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்: 

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தொடரப்பட்ட இந்த சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என ஆர்.டி.ஐ. ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த சொத்துக்களை ஏலம் விடுவதற்காக கடந்த மாதம் கர்நாடக அரசு அரசுதரப்பு வழக்கறிஞரை நியமித்தது. 

இதையடுத்து, சொத்துக்கள் ஏலம் விடும் பணி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மூலமாக வேகம் எடுத்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ தங்க வெள்ளி வைர நகைகள் மட்டும் பெங்களூரு நகரில் விதான் சவுதா சட்டமன்ற வளாகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள புடவைகள் செருப்புகள் சால்வைகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய சொத்துக்களும் சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான துணை கண்காணிப்பாளர் புகழ் வேந்தன் தெரிவித்தார். 

இதனிடையே சென்னையில் உள்ள சொத்துக்களை உடனடியாக பெங்களூரு கொண்டு வந்து அதை ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நரசிம்ம மூர்த்தி தமிழக அரசுக்கும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் இந்த வழக்கின் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமனம் ஆகியுள்ள கிரண் ஜவுளி -க்கும் மனு மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார் . 

ஒருபுறம் சொத்துக்களை ஏலம் விடும் பணி வேகம் எடுத்து வரும் நிலையில் மறுபுறம் பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தீபா தரப்பில் வழக்கறிஞர் சத்ய குமார் ஆஜராகி ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட கூடாது; அந்த சொத்துக்களுக்கு தீபா வாரிசு என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது; ஆகையால் இந்த சொத்துக்களை அவருக்கு வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களையும் பறிமுதல் செய்யப்படாமல் பட்டியலிடப்பட்டுள்ள சொத்துக்களையும் பட்டியலிடப்படாத  சொத்துக்களையும் வாரிசு வகையில் உரிமை கோரியுள்ளார். 

மேலும் முழு சொத்துக்கள் குறித்தான தகவல்கள் தங்களிடம் பட்டியல் இல்லாத நிலையில் சொத்து பட்டியலை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபா தரப்பில் சொத்துக்களை உரிமை கோரி மனு தாக்கல் செய்த நிலையில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜராகி இருந்த துணை கண்காணிப்பாளர் புகழ் வேந்தன் இந்த மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

மேலும் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கிரண் எஸ் ஜவளி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்ட நிலையில் அதை ஏற்று வழக்கை ஜூன் மாதம் மூன்றாம் தேதிக்கு வழக்கை நீதிபதி எச் ஏ மோகன் ஒத்தி வைத்தார்.