தமிழ்நாடு

மும்பை போலீஸ் பேசுவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஆசாமி...

காவல்துறையின் பெயரிலேயே மோசடியில் இறங்கிய கும்பல் குறித்து பார்க்கலாம் விரிவாக...

மாலை முரசு செய்தி குழு

வங்கியில் இருந்து பேசுவதாகவும், ஆன்லைனில் ஆர்டர் வந்ததாகவும் மொபைலில் பேச்சைப் போடும் மோசடி ஆசாமிகள் வழக்கமாக ‘கார்டு மேல இருக்குற நம்பர் சொல்லுங்கோ சார்...’ என்றுதான் கூறுவது வழக்கம்.

ஆனால் இதனை மக்கள் எளிதில் தெரிந்து கொண்டனர் என்பதை அறிந்து கொண்டவர்கள் தற்போது தங்கள் பாணியை மாற்றியிருக்கின்றனர். மொபைலில் மிரட்டல் தொனியில் பேசும் மர்மஆசாமிகள், மும்பை போலீஸ் பேசுவதாக கூறுவதும், வீட்டில் உள்ள அனைத்து கதவுகளையும் மூடி விட்டு வீடியோ காலில் வாருங்கள், விசாரிக்க வேண்டும் என்றும் புதிய பாணியில் மிரட்டலைத் தொடங்கியிருக்கின்றனர்.

இதே பாணியை முன்பே அறியாமல் மும்பை போலீசார் பேசுவதாக கூறியதை நம்பி மோசடி ஆசாமிகளிடம் சிக்கியவர்தான் திருச்சியைச் சேர்ந்த இந்த பட்டதாரி.

திருச்சி மாநகரின் மையப் பகுதியான கருமண்டபத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதியன்று இளைஞருக்கு போன் செய்த மர்ம ஆசாமி ஒருவர் தாங்கள் மும்பை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதற்கு இளைஞரும் பொறுமையாக பேசியதைத் தொடர்ந்து உடனடியாக வீட்டுக்குள் சென்று அனைத்து கதவுகளையும் பூட்டி விடுமாறும், ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட விவரங்களுடன் தன்னிடம் வீடியோ காலில் பேசுமாறும் மிரட்டல் தொனியில் மர்ம ஆசாமி பேசியுள்ளார்.

பின்னணியில் வாக்கி டாக்கி சத்தம் கேட்டதால் நிஜ போலீஸ் என நம்பிய இளைஞர் அனைத்து விவரங்களையும் சொல்ல தயாரானார். ஆனால் திடீரென வங்கிக் கணக்கில் கிடந்த ஒரு லட்ச ரூபாயை சரியாக தெரிவித்தவர், உடனடியாக தனக்கு அனுப்புமாறு கூறினார்.

எதற்காக பணம் அனுப்ப வேண்டும் என இளைஞர் கேட்க, மறுமுனையில் இருந்தவர் கொலை வழக்கு பதிவானதாக கூறியுள்ளார். அதே நேரம் நண்பர் ஒருவரின் ஆலோசனையைக் கேட்டு மர்ம ஆசாமியிடம் இருந்து வந்த அழைப்பை உடனடியாக துண்டித்தார்.

போலீஸ் தோரணையில் மிடுக்குடன் பேசியதை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை அனுப்ப தயாராக இருந்ததகாவும், தன்னைப் போல யாரும் நம்பி விட வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வழக்கமாக பரிசு விழுந்திருக்கிறது, ஆன்லைனில் முகவரியின்படி ஆடம்பரப் பொருள் வந்திருக்கிறது என பேசி மோசடியில் இறங்கும் கும்பல் தற்போது போலீஸ் என்றே கூறி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

சைபர் கிரைம் குற்றங்கள் பெருகி வரும் நிலையில் காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்குமா?