தமிழ்நாடு

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வதந்தி வீடியோ...டிடிவி பதிவிட்ட ட்விட்டர் பதிவு!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வட மாநில இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த காணொலிகள் உண்மையில்லை என்று தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல், இங்கு உள்ள வடமாநிலத்தவர்களும் தமிழ்நாட்டில் எங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் நடைபெறவில்லை என்று கூறி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், ”வெளிமாநில தொழிலாளர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருப்பது, அவர்களை தமிழக அரசு வரன்முறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக” குறிப்பிட்டுள்ளவர், இதற்காகதான், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்கு, நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அதனை திமுக அரசு காதில்வாங்கிக்கொள்ளவே இல்லை. அதனால் தான் இந்த விவகாரம் மாநிலங்களுக்கிடையேயான பிரச்னையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, இதன்பிறகாவது, வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னையில் தி.மு.க. அரசு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.