உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு, கார் என அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மற்றும் விழுப்புரத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2006 - 11-ம் ஆண்டு கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது விதிமுறைகளை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதா என அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் மட்டும் எழும்பூர், பெசண்ட் நகர் உட்பட 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலும் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சரின் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
அதேபோல் அமைச்சரின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணி உட்பட அமைச்சருக்கு தொடர்ப்புள்ளவர்கள் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. துணை ராணுவத்தினர் உதவியுடன் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சரின் காரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, ஆவணமாக டைரி ஒன்று சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், அமைச்சர் வீட்டிற்கு திமுக நிர்வாகிகள் வந்த நிலையில், யாரையும் அனுமதிக்காமல் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.