தமிழ்நாடு

எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்.... நிலையை உருவாக்குவற்கான சிறப்புச் சட்டம்!!!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள் தோறும் ஒரு திருக்குறளை அதற்கான பொருளுடன் எழுதி வைக்க வேண்டும் எனவும் ஆட்சி சொல்லகராதியில் உள்ள  ஓர் ஆங்கிலச் சொல் மற்றும் அதற்கு இணையான தமிழ்ச் சொல்லையும் எழுதி வைக்க வேண்டும் என்றும் அரசுத்துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைத்தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் ஆணையிட்டுள்ளார்.  

அரசு அலுவலகங்களில் திருக்குறள் மற்றும் கலைச்சொற்களை எழுத வேண்டும் என்று கடந்த 2000-ஆவது ஆண்டிலேயே அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது எனவும் ஆனாலும், அதை தவறாமல் கடைபிடிக்கும்படி தலைமைச் செயலாளரே நினைவூட்ட வேண்டிய நிலைமை தமிழ்நாட்டில் இருப்பது வருத்தமளிக்கிறது எனவும் தமிழர்களின் வாழ்வில் அனைத்திற்கும் முதலாவதாக அன்னைத் தமிழ் தான் இருக்க வேண்டும் எனவும்  ராமதாஸ் பேசியுள்ளார்.

அன்னைத் தமிழை அழிவிலிருந்து காப்பதற்காக  தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் இன்னும்  ஏராளம் எனவும் கடந்த பிப்ரவரி திங்களில் சென்னையிலிருந்து மதுரை வரை தமிழைத்தேடி பயணத்தை நான் மேற்கொண்டிருந்த போது, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை 08.08.1977-ஆம் நாளில் பிறப்பிக்கப்பட்ட  அரசாணை எண் 575-இன்படி தமிழ் மொழிக்கு முதன்மை இடம் வழங்கி அமைக்க வேண்டும் என்று அனைத்து வணிகர்களுக்கும் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையும்,  தமிழ் வளர்ச்சித் துறையும் அறிவுறுத்தின எனக் கூறிய அவர் ஆனாலும் அதன் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவற்றை தமிழக அரசு தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

பட்ட மேற்படிப்பு வரை தமிழ்க் கட்டாயப்பாடம், பட்டப்படிப்பு வரை தமிழ் கட்டாயப் பயிற்றுமொழி, நீதிமன்றங்களிலும், கோவில்களிலும் தமிழ், தமிழில் படித்தவர்களுக்கு உயர்கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு, எங்கும் தமிழ்... எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்குவற்கான சிறப்புச் சட்டம்  என தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன எனவும் அவை அனைத்தையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.