தமிழ்நாடு

அடுத்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு...அதுக்குதான் இந்த மழையோ...!

Tamil Selvi Selvakumar

தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். 

மாண்டஸ் புயல்: 

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, படிபடியாக மாறி மாண்டஸ் புயலாக மாறியது. இதனால் கடந்த 9 ஆம் தேதி காற்றுடன் கனமழையானது வெளுத்து வாங்கியது. மாண்டஸ் புயலின் தாக்கத்தினால் சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு மாவட்டங்களில் பெருமளவு மரங்கள் சாய்ந்து பாதிப்புக்குள்ளானது. தொடர்ந்து, இதன் தாக்கத்தால் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு:

இந்நிலையில், இன்று காலை முதலே சென்னை உள்ளிட்ட ஒருசில இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. விடாது பரவலாக பெய்யும் மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், நாளை தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்தார். 

அதன்படி, இன்று தமிழ்நாட்டில் மிதமான மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக கூறிய அவர், சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.