தமிழ்நாடு

பிள்ளைகளுக்காக தன்னை தானே மாய்த்துக் கொண்ட தாய்...உதவ முன்வருமா அரசு?

Tamil Selvi Selvakumar

தனது குழந்தைகளை வாழ வைக்க ஓடும் பேருந்தில் விழுந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் முள்ளுவாடிகேட் மறைமலைஅடிகள் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி. கணவரை பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக தாயுடன் வசித்து வரும் பாப்பாத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கல்லூரி படித்து வரும் மகளும், மகனும் உள்ளனர். 

இந்நிலையில் கடந்த மாதம் 28-ஆம் தேதி தனியார் பஸ் மோதியதில் பாப்பாத்தி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து தொடர்பாக  விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசாருக்கு பாப்பாத்தி விபத்தில் உயிரிழக்கவில்லை என்பதும், தானாக வந்து பேருந்து முன்பு விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.

சிசிடிவி காட்சியில் சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, டவுன் பகுதியில் இருந்து சென்ற பேருந்தில் விழுவதற்காக ஓடி சென்றபோது மோட்டார்சைக்கிள் ஒன்று குறுக்கே வந்துள்ளது. அதில் மோதி பாப்பாத்தி கீழே விழுந்துள்ளார். அப்படியும் விடாத அவர், 2-வதாக வந்த பஸ்சிற்குள் ஓடிச்சென்று விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து முதலில் விபத்து என்று வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சியை பார்த்த பிறகு தற்கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர்.

அதன்பின்னர் மேற்கொண்ட விசாரணையில், தனது குழந்தைகளை வாழ வைப்பதற்காக  ஓடும் பேருந்தில் விழுந்து தாய் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தனது பிள்ளைகளின் கல்லூரி படிப்பிற்கான கட்டணத்தை கட்ட முடியாத நிலையில் பாப்பாத்தி இருந்து வந்ததாகவும், வறுமையில் வாழ்ந்து வந்ததால் மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த சூழ்நிலையில், விபத்தில் இறந்தால் நிவாரணத் தொகை கிடைக்கும் என்று யாரோ கூறியதால், பேருந்தில் விழுந்து உயிரிழந்தால் நிவாரணத் தொகை கிடைக்கும், அதில் குழந்தைகள் பிழைத்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் ஓடும் பேருந்து முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி தனது பிள்ளைகளுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை என்பதற்காக, தனது உயிரை விட்டால் அதில் வரும் நிவாரண தொகையை வைத்து பிள்ளைகள் எப்படியாவது பிழைத்து கொள்வார்கள் என்று எண்ணி உயிரை விட்ட இந்த தாயின் கடமை உணர்வை என்னவென்று சொல்வது....இந்நிலையில் அந்த தாயின் பிள்ளைகளுக்கு உதவுவதற்கு அரசு முன்வருமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.