தமிழ்நாடு

”மருத்துவர்களின் வருகையை கண்காணிக்க பறக்கும்படை ...” சுகாதார துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Malaimurasu Seithigal TV

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் செயல்பாடு, மருத்துவர் மற்றும் செவிலியர் வருகை, நோயாளிகளுக்கான சிகிச்சை ஆகியவற்றை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க வேண்டும் என தமிழக சுகாதார துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் மருந்துகளை காலாவதியாகச் செய்தது, பணி ஓய்வு பலன்கள் வழங்க மறுத்தது ஆகியவற்றை எதிர்த்து, மருந்து காப்பக பொறுப்பாளர் முத்துமாலை ராணி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், முத்துமலை ராணி மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ததுடன், புதிதாக விசாரணை நடத்தும்படி அரசுக்கும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்குமாறு மனுதாரருக்கும் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் உரிய நேரத்திற்கு வருகிறார்களா,  நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து சோதனை நடத்துவதற்காக மண்டல மற்றும் மாவட்ட அளவிலான பறக்கும் படைகளை அமைக்க தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, பறக்கும் படைகள் முறையாக செயல்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டுமெனவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.