தமிழ்நாடு

இரு நீதிபதிகளின் மாறு பட்ட தீர்ப்பு... மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை!

Malaimurasu Seithigal TV

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணையில், இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை கடந்த 14-ம் தேதி கைது செய்தது. அப்போது, அவருக்கு  ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், சென்னை காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை வருகின்ற 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

இதனிடையே, செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக கைது செய்து காவலில் வைத்துள்ளதாக குற்றம், சாட்டி அவரது மனைவி மேகலா சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில், விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், இரண்டு நீதிபதிகளும், மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர்.  

இதில் "அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம்" என்றும், "அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது" என்றும் நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கியுள்ளார். அதேநேரம், "செந்தில் பாலாஜி மீதான ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல" என்று, நீதிபதி பரத சக்ரவர்த்தி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும், செந்தில் பாலாஜி, காவேரி மருத்துவமனையில், சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவலில் இருக்கும் நாட்களாக எடுத்துக் கொள்ள முடியாது, செந்தில் பாலாஜி சிகிச்சையை தொடரலாம் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளார். 

இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால், மூன்றாவது நீதிபதியை பரிந்துரை செய்யும் பட்சத்தில், அவர் யார் என்பதை தலைமை நீதிபதியே முடிவு செய்வார், என தகவல் வெளியாகியுள்ளது.