தமிழ்நாடு

போலீசாருடன் மல்லுக்கட்டிய மாற்றுத்திறனாளி ...! காவல்நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்து,.. கால் முறிந்து பரிதாபம்....!

Malaimurasu Seithigal TV

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகியுள்ளார். 

காவல்நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்கள் எந்நேரமும் சீரியஸ் ரூட்டிலேயே பணியாற்றுவதுண்டு. ஆனால் சில நேரங்களில் சில மனிதர்கள் சிக்கி விட்டால்.., அவர்களை வைத்தே பொழுது போக்கி வருவது வாடிக்கையாக இருக்கிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் சந்தானத்தை விடிய விடிய மிமிக்ரி செய்ய வைத்து கொடுமைப்படுத்தும் போலீசாரைப் போலவே செங்கல்பட்டு பகுதியில் நடந்துள்ளது இந்த சம்பவம். 

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூரை அடுத்த வேப்பஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். 42 வயதான இவர் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி ஆவார். இவர், சாலை விதிகளை மீறி  இருசக்கர வாகனத்தை இயக்கினார் என்ற காரணத்தால் கூவத்தூர் இ 5 காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்நிலையில், பிடிபட்ட நாகராஜ் மதுபோதையில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் வண்டியை திருப்பித் தர முடியாது என போலீசார் தெரிவித்தனர். ஆனால் தான் போதையில் வரவில்லை என ஆத்திரமடைந்தவர், போலீசாருடன் மல்லுக்கட்ட தொடங்கி விட்டார். 

அப்போது, நாகராஜ் மாற்றுத்திறனாளி என்பதை கருத்தில் கொண்ட போலீசார், சமாதானம் செய்வதையும் விடுத்து, நாகராஜை ஒரு கோமாளி போல சித்தரித்து இரவு முழுக்க விளையாட்டு காட்டியுள்ளனர். 

ஏற்கெனவே கடந்த மாதம் நாகராஜை, கைது செய்த போலீசார் காவல்நிலையத்திற்குள் வைத்து சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவ்வப்போது இருசக்கர வாகனத்தில் வரும் நாகராஜை கண்காணிக்கும் போலீசார், நேரம் கிடைக்கும் போதெல்லாம் இழுத்து வந்து கேலி கிண்டல் செய்வதாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து போலீசாருடன் நள்ளிரவில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி உபாதையை கழிப்பதற்காக கழிவறையை நோக்கி நகர்ந்தார். அப்போது கழிவறைக்குள் சென்ற நாகராஜ், நிலைதடுமாறி வழுக்கி விழுந்ததில் கால் முறிந்து அலறியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 

மேலும், நள்ளிரவில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி பாத்ரூமில் வழுக்கி விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.