தமிழ்நாடு

பள்ளி ஆசிரியர் மீது அத்துமீறல்: ஆனால், கடமைக்கு ஒரு கண்டன அறிக்கை!

Tamil Selvi Selvakumar

கும்மிடிப்பூண்டி அருகே தற்காலிக ஆசிரியரை காலணி கொண்டு தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா. அருணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு பகுதியை சேர்ந்த சுரேஷ்பாபு - செவந்தி தம்பதியினரின் மகன் ஹரிஹரன் என்பவர் குருவராஜ கண்டிகை அரசு நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்றைய தினம் பள்ளியின் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வரும் மோகன்பாபு, மாணவர் ஹரிஹரனை பிரம்பால் அடித்ததாக சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பலரும் பள்ளிக்கு வந்து ஆசிரியர் மோகனை ஒருமையில் பேசி, தான் அணிந்திருந்த காலணிகளை கழற்றி அடித்ததும், கைகளால் தாக்கியதும் நெஞ்சை பதப்பதைக்க வைத்தது. 

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா. அருணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாணவர் ஹரிஹரனை அடித்ததால் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை மாணவனின் பெற்றோர்கள் காலணியால் தாக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடக்கா வண்ணம் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே கொண்டு வந்து தொடர்ந்து ஆசிரியர்களை தாக்கும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்க்கும் தனது அறிக்கையின் மூலம் வலியுறுத்தி உள்ளார். 
.
இருப்பினும், ஒரு ஆசிரியரை பள்ளியில் வைத்து காலணியில் அடித்ததற்கு இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்காமல், இன்று  தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சார்பில், கடமைக்கு ஒரு கண்டன அறிக்கை வெளியாகியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.