சென்னையில் வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என பண்ருட்டி ராமச்சந்திரன் தொிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக-அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் ஓ பன்னீர் செல்வம் அணிக்கிடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதையும் படிக்க : ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் உடனான 2 நாள் மாநாட்டில் முதலமைச்சர் அறிவுறுத்தியது என்னென்ன?
இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, கு.ப. கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மருது அழகுராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனா்.
இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய பண்ரூட்டி ராமச்சந்திரன், நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளான பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும், கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றதாக கூறினார். மேலும், கூட்டணி குறித்து பாஜக வுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், தேர்தல் நேரத்தில் யார் தலைமையில் கூட்டணி அமையும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.