தமிழ்நாடு

பட்டமளிப்பு விழா நடக்காததற்கு ஆளுநர் தான் காரணம்...பொன்முடி குற்றச்சாட்டு!

Tamil Selvi Selvakumar

பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் தேதி தராததால் 9 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஒரு கோடியே 87 லட்சத்து 693 விண்ணப்பங்கள் வரப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 18,610 விண்ணப்பங்கள் கூடுதல் எனவும் கூறினார்.

அதேபோல், கடந்த இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சர் தலைமையின் கீழ் பொறியியல் படிப்புகளுடன் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் உள்ளிட்டவை அளிக்கப்படுவதன் எதிரொலியாகவே விண்ணப்பங்கள் அதிகம் வரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் கடந்த 2 ஆண்டு காலமாக பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை எனவும், இதன் காரணமாக கல்லூரிகளில் படித்து முடித்த 9 லட்சத்து 29 ஆயிரத்து 542 மாணவர்கள் பட்டமளிப்பு விழா சான்றிதழ் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக ஆளுநர் தேதி தராததன் காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பட்டமளிப்பு விழாவில் வட இந்தியாவைச் சார்ந்த பிரபலங்கள் மற்றும் மத்திய அமைச்சர்களை அழைக்க ஆளுநர் விரும்புவதாகவும், அதே நேரத்தில் மத்திய அமைச்சர்கள் தேதி கிடைக்காததன் காரணமாக பட்டமளிப்பு விழா நடைபெறுவதில் கால தாமதம் ஏற்படுவதாக கருதுவதாகவும் குற்றம்சாட்டினார்.

பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு தமிழக அரசின் தரப்பில் அனைத்து ஏற்பாடுகளையும் உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஆளுநர் தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறினார்.