தமிழ்நாடு

திமுக மீதான இபிஎஸ்ஸின் 8 குற்றச்சாட்டுகள்...

Malaimurasu Seithigal TV

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் மீதான 8 குற்றச்சாட்டுகள் அடங்கிய புகார் மனுவை அளித்தார். அவற்றின் தொகுப்பை இப்போது பார்ப்போம்....

1. சென்னை கிண்டி ராஜ்பவனில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கடந்த 18 மாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

2. கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு  குறித்து மத்திய உளவுத்துறை கடந்த அக்டோபர் 18-ம் தேதி எச்சரித்தும், அதற்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் கோவை குண்டுவெடிப்பில் மாநில உளவுத்துறை தோல்வியடைந்து விட்டதாகவும், ஒருவேளை மக்கள் கூட்டம் நிரம்பிய இடத்தில் குண்டு வெடித்திருந்தால் உயிரிழப்புகள் எவ்வளவு இருந்திருக்கும் என அதிர்ச்சி தெரிவித்துள்ளார். 

3. கள்ளக்குறிச்சி, கனியாமூர் மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தில், உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநில அரசு தவறியதாக குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவே, வன்முறை சம்பவங்களுக்கு இரண்டு சமூகங்கள் தான் காரணம் என வதந்திகளை பரப்பியதாக சாடியுள்ளார்.  இந்த விவகாரத்தில் மாநில காவல்துறை உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றியிருந்தால், கனியாமூர் கலவரம் நடந்திருக்காது என்றும் அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

4. தமிழகத்தில், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களின், விற்பனையும், புழக்கமும் பள்ளி, கல்லூரிகளின் வாசல்களுக்கு சென்றடைந்து விட்டதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.  சட்டவிரோதப் போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்துவதில் இந்த திமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

5. தமிழக அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், மருந்து பற்றாக்குறைக்கு அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது எந்த விதத்தில் சரி என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.  மருந்துப் பற்றாக்குறைக்கு மருந்துகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை இறுதி செய்யாததே இதற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

6. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை பயன்படுத்தும் உரிமையை திமுக அரசு பறித்து விட்டதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.  உச்சக்கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளில் முடிக்கப்பட்ட பணிகள் குறித்து தெரிவிக்கும் விளம்பர பலகைக்கு தலா 350 ரூபாய் மட்டும் செலவாகும் நிலையில், அரசு ஒரு விளம்பர பலகைக்கு 7 ஆயிரத்து 906 ரூபாய் மிகைப்படுத்தி காட்டுவது வியப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  விளம்பர பலகை வைப்பதில் நடக்கும் ஊழல்களை முறையாக விசாரிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

7. சட்டவிரோத பார்களில் மதுபானங்கள் அதிக விலைக்கு 24 மணிநேரமும் விற்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், இதனால் அரசின் வரிப் பணம் கஜானாவிற்கு செல்லாமல், திமுக பிரமுகர்களின் பாக்கெட்டுகளுக்கு நேரடியாக செல்வதாக கூறியுள்ளார்.  மாநிலத்தில் மதுபானம் சப்ளை செய்யும் உற்பத்தி ஆலைகள், கலால் வரியை முறையாக செலுத்தாமல்,  மதுபானங்களை பார்களுக்கு சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதால், அரசு கருவூலத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

8.தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும், அரசின் நிர்வாகத்தில் அவர் தலையீடு இல்லை என்றும் இபிஎஸ் கூறியுள்ளார்.  மேலும் திமுக அரசின் ஊழல், லஞ்ச லாவண்யங்களை ஆளுநர் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுமட்டுமல்லாது மழைநீர் வடிகால் பணிகளை முறையாக திட்டமிடாததால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை தோல்வி அடைந்து விட்டதாகவும்,  மாநிலத்தில் லோக் ஆயுக்தா முழுமையாக செயல்படவில்லை என்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.