நாட்டின் 76 -ஆவது சுதந்திர தினம் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் 3-வது இறுதி ஒத்திகை நடைபெற்றது.
நாட்டின் 76 -ஆவது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்ற உள்ளார். இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டைப் போலவும் இந்த ஆண்டு 3 நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 13 படைப் பிரிவினரின் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை வாகன அணிவகுப்பு நடைபெற்றது.
இதனிடையே 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் மட்டும் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பேருந்து நிலையங்கள், விமான நிலையம், ரயில் நிலயங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல், தனியார் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.