தமிழ்நாடு

சிறுமியை மாடு முட்டியதன் எதிரொலி : 73 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Tamil Selvi Selvakumar

சென்னையில் பள்ளி மாணவியை மாடு முட்டியதன் எதிரொலியாக, கடந்த 3 நாட்களில் சாலையில் சுற்றித்திரிந்த 73 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

அண்மையில், சென்னையில் பள்ளி மாணவியை மாடு ஒன்று புரட்டி எடுக்கும் வீடியோ வெளியாகி அனைவரையும் பதைபதைக்க வைத்தது. இதன் எதிரொலியாக, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்திருந்தது. 

அதன்படி, சாலையில் சுற்றித்திரிந்த 73 மாடுகள் கடந்த மூன்று நாட்களில் பிடிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவல்லிக்கேணி, வில்லிவாக்கம், கோயம்பேடு, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் திறந்த வெளி மற்றும் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு மாட்டுத் தொழுவத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 

அதேசமயம், மாடுகள் பிடிக்கும் போது சினை (வயிற்றில் கன்று உள்ள) மாடுகளை கவனமாகவும், பசு மாடு மற்றும் அதன் கன்று குட்டிகளை தனித்தனியாக பிரிக்காமலும் பிடிக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

மேலும் திறந்த வெளியில் மாடுகளை திரிய விட வேண்டாம் என்று மாட்டின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.