தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு நடத்த 60 சதவிகிதம் பெற்றோர் ஆதரவு!  

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவதற்கு 60 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் பல்வேறு மாநிலங்களும் மாநில வாரியாக நடத்தப்படும் பொதுத் தேர்வை ரத்து செய்து வருகின்றன. சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெறும் ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ககர்லா உஷா, ஆணையர் நந்தக்குமார் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் ஆகியோரிடம் கருத்துக் கேட்டு, அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்க முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அறிவுறுத்தினார். இதுதொடர்பாக இன்று (ஜூன் 4) மாலை, கல்வியாளர்கள், பெற்றோர் நலச் சங்கத்தினர், ஆசிரியர் மற்றும் மாணவர் அமைப்பினர் ஆகியோருடன் அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். 

மத்திய அரசு CBSE மாணவர்களுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்துள்ள நிலையில் தமிழகத்தில் மாநில பாட திட்டத்தின் கீழ் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என்பது தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்,பள்ளி நிர்வாகம், கல்வியாளர்கள் என அனைவரின் கருத்தை கேட்டு முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்மையில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான கருத்துக்களை பெற மின்னஞ்சல் முகவரியான tnschooledu21@gmail.com என்ற முகவரிக்கு கருத்துக்களை பகிரலாம் எனவும், 14417 என்ற எண்ணுக்கு அழைத்தும் ஆசிரியர்கள் மாணவர்கள் ,பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவித்து இருந்த நிலையில் கடந்த இரு தினங்களாக கருத்துகள் பெறப்பட்டு வருகிறது. அதில் 60% பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியது.

அதன் தொடர்ச்சியாக, இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்கிறார்..அதன் பின்னர் முதல்வர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில்,  பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் இறுதி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, இன்று மாலை அல்லது நாளை தமிழக அரசு சார்பில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் நடைப்பெறுகிறதா? அல்லது ரத்து செய்யப்படுகிறதா ? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மாணவர்களின் உயர்கல்வியையும், வேலைவாய்ப்பையும் கருத்தில்கொண்டு தேர்வு நடத்த வேண்டும். ஆன்லைன் வாயிலாக நடத்தலாம். மூன்று மணி நேரத் தேர்வை ஒன்றரை மணியாகக் குறைத்து அதற்கேற்ற வகையில் வினாத்தாள்களைத் தயார் செய்து தேர்வு நடத்தலாம். தேர்வு மையங்களை அதிகரித்துத் தேர்வு நடத்தலாம் எனப் பல கல்வியாளர்களும் பெற்றோர்களும் கூறி வருகின்றனர்.

இவ்வாறு 60 சதவிகிதம் பேர் பொதுத் தேர்வை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் தற்போது கிராமப்புறங்களிலும் வைரஸ் தொற்று அதிகமாகப் பரவி வருவதால், மாணவர்களின் உடல்நலனே முக்கியம் என்று கூறி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் சில பெற்றோர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.