தமிழ்நாடு

செந்தில் பாலாஜி வழக்கு; 3-வது நீதிபதியாக சி.வி. காத்திகேயன் நியமனம்!

Malaimurasu Seithigal TV

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணையில், 3-வது நீதிபதியாக சி.வி. காத்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். 

சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 14-ம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனிடையே, செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக கைது செய்து காவலில் வைத்துள்ளதாக குற்றம், சாட்டி அவரது மனைவி மேகலா சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். "அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம்" என்று நீதிபதி நிஷா பானுவும்,  ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று, நீதிபதி பரத சக்கரவர்த்தியும் தீர்ப்பு வழங்கினர்.

இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் மூன்றாவது நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் மூலம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும், அதில், பெரும்பான்மை தீர்ப்பு எதுவோ அதுவே வழக்கின் தீர்ப்பாக அமையும் என்றும், தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் 3-வது நீதிபதியாக, சி.வி. கார்த்திகேயனை நியமித்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.