தமிழ்நாடு

அரசு நிலத்திற்குரிய குத்தகை பாக்கி 31 கோடி - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Malaimurasu Seithigal TV

அரசு நிலத்திற்குரிய குத்தகை பாக்கி 31 கோடி ரூபாயை சத்யா ஸ்டுடியோவிடமிருந்து  வசூலிக்கவும்,  மீட்கப்பட்ட நிலத்தை வேலி அமைத்து பாதுகாக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடையாறில் உள்ள சத்யா ஸ்டுடியோ நிறுவனத்திற்கு 1968ல் 93 ஆயிரத்து 540 சதுர அடி நிலத்தை தமிழக அரசு குத்தகைக்கு கொடுத்தது.1998ல் அந்த குத்தகை காலம் முடிவடைந்த நிலையில் அந்த இடத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால், குத்தகை காலம் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

சத்யா ஸ்டுடியோ

அதன்பிறகு 2004ஆம் ஆண்டு வரை 31 கோடியே 9 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தக் கோரி மயிலாப்பூர் வட்டாட்சியர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியும் செலுத்தாததால், நிலத்தை திருப்பி எடுத்து 2008ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சத்யா ஸ்டுடியோ சார்பாக நிர்வாக இயக்குனர் சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, 2019ஆம் ஆண்டில்  அடையாறு நோக்கி செல்லக்கூடிய பசுமை வழி சாலை மற்றும் டி.ஜி.தினகரன் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக, அரசு இசைக் கல்லூரி வழியாக சத்யா ஸ்டுடியோ அருகில் அமைந்துள்ள அரசு நிலத்தை அடைந்து துர்காபாய் தேஷ்முக் சாலைக்கு இணைப்பு சாலை அமைக்க அரசு திட்டம் தீட்டியது.

அரசுக்கு உத்தரவு

இந்த வழக்கு காரணமாக அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசு துறைகளுக்கு இடையே நில பரிமாற்ற திட்டங்கள் நிலுவையில் இருந்துவந்தன.

இந்த நிலையில் 2008ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், அரசுக்கு செலுத்த வேண்டிய 31 கோடியே 9 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கியை வசூலிக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்

மேலும், சத்யா ஸ்டுடியோ அருகில் உள்ள அரசு நிலத்திற்கு வேலி அமைத்து பாதுகாக்கவும், 2019ஆம் ஆண்டு திட்டப்படி இணைப்பு சாலை அமைக்கும் பணியை தொடரவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்