தமிழ்நாடு

தூத்துக்குடி அனல் மின்நிலையம்: 2வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை!

Tamil Selvi Selvakumar

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில்  வருமானவரித் துறை அதிகாரிகள் இரண்டாவது  நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். 


தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், சென்னையைச் சேர்ந்த ராதா இன்ஜினியரிங் நிறுவனத்திடம் உள் ஒப்பந்தம் பெற்று தூத்துக்குடி துறைமுகத்தில் நிலக்கரி இறக்கும் தளத்திலிருந்து அனல் மின் நிலையம் வரை கன்வேயர் பெல்ட் அமைத்த ஜான் வசீகரன் திரவியம் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் சாம்பல் கையாளும் திவ்யா டிரேடர்ஸ்  நிறுவனங்களில் பணிகள் மற்றும் கணக்குகள் குறித்து சோதனை செய்வதற்காக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை கன்வேயர் பெல்ட் மூலம் கொண்டு சென்று மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் அனல் மின்நிலையங்களுக்கு தேவையான கன்வேயர் பெல்ட் உள்ளிட்ட உபகரணங்களை சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் வழங்கி உள்ளது. 

இதில் முறைகேடுகள் செய்து வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், வருமான வரித்துறையினர் நேற்று அந்த நிறுவனங்கள் மற்றும் அதன் ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அனல் மின்நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தினர். பராமரிப்பு பணிகளுக்காக பொருட்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்து உள்ளதா?வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 2வது நாளாக வருமானவரி அதிகாரிகளின் சோதனையால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.