தமிழ்நாடு

"சென்னையிலிருந்து 2 மணி நேரத்தில் பெங்களூரு" மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!

Malaimurasu Seithigal TV

இந்த வருட இறுதிக்குள் அல்லது அடுத்த வருடம் ஜனவரியில் பெங்களூரு சென்னை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திட்டம் செயல்படுத்தப்படும். அதன் மூலம் சென்னை முதல் பெங்களூருக்கு 2 மணி நேரத்தில் செல்ல முடியும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அசோக் லைலாண்ட் நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு விழாவில் மத்திய தரை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் அசோக் லைலாண்ட் நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு விழாவின் சிறப்பாக  ஹைட்ரஜன் பயன்பாட்டில் இயங்கும் பியூயல் செல் ( fuel cell )பேருந்து மற்றும்  மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஸ்விட்ச் வகை சரக்கு வாகனங்கள் என இரண்டு புதிய வகை வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 1000 க்கும் மேற்பட்ட அசோக் லேலாண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களும் பங்கேற்றனர்.


இந்த விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது,  இந்தியா வேகமாக வளரும் நாடு. உலகிலேயே வேகமாக வளரும் நாடு பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா தற்போது வாகன உற்பத்தி துறையில் உலகின் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதை சில வருடங்களில் முதல் இடத்திற்கு கொண்டு வருவோம்.

இந்திய பொருளதாரத்தை 5 டிரில்லியன் பொருளாதார மாக மாற்ற வேண்டும் என்றால் இந்த வாகன உற்பத்தி துறை மிகவும் முக்கியம். படிம ஏரி பொருட்களை பயன்படுத்துவதால் காற்று மாசு அதிகாமக உள்ளது அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான்  நமது டெல்லி. எனவே இது தான் சரியான தருணம் மாற்று எரிபொருளை இந்தியா ஏற்பதற்கு என தெரிவித்தார்.

மெத்தனால் பேருந்துகள் மற்றும் லாரிகளை இந்தியா பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எனது கனவு. தமிழ்நாடு நெல் விவசாயிகள் மூலம் தயாரிக்கபடும் மெத்தனால் ஒரு நாள் வான்வெளி போக்குவரத்துறையில் பயன்படுத்தபடும். இந்த வருட இறுதிக்குள் அல்லது அடுத்த வருடம் ஜனவரியில் பெங்களூரு -சென்னை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திட்டம் செயல்படுத்தப்படும். அதன் மூலம் சென்னை முதல் பெங்களூருக்கு 2 மணி நேரத்தில் செல்ல முடியும் எனக் கூறினார்.

மேலும் புதிய பசுமை நெடுஞ்சாலை திட்டம் தமிழ்நாட்டில்  செயல்படுத்த பட உள்ளது. அது தற்போது இருக்கும் டெல்லி - சென்னை தூரத்தை 320 கிலோமீட்டர் வரை குறைக்கும் என தெரிவித்தார்.