தமிழ்நாடு

தீபாவளி : காவல்துறையின் 19 அறிவுரைகள்!

Malaimurasu Seithigal TV

தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாடும் வகையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பொதுமக்களுக்கு, 19 அறிவுரைகளை வழங்கியுள்ளார். 

பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை சென்னை பெருநகர காவல் துறை வழங்கியுள்ளது. அதில், ரசாயனம் கலந்த பட்டாசுகளைத் தவிர்த்து, சுற்றுச் சூழலுக்கு உகந்த பசுமைப் பாட்டாசுகளை மட்டுமே விற்கவும், வெடிக்கவும் வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 

அத்துடன் உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க, காலை 6 மணிமுதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணிமுதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், குடியிருப்புகளுக்கு, 4 மீட்டருக்கு அப்பால் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகளை விற்பனை செய்வதோ, வெடிப்பதோ கூடாது என்று அறிவுறுத்தியுள்ள காவல் துறை, குடிசை மற்றும் மாடி குடியிருப்புகள் அருகில் ராக்கெட் போன்ற பாட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

பெட்ரோல் பங்க், வாகன நிறுத்தம் உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கும் இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும், பெரியவர்களின் பாதுகாப்பு இன்றி குழந்தைகள் பட்டாசு வெடிக்க கூடாது என்றும், கால்நடைகளுக்கு அருகில் பட்டாசு வெடிக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ள சென்னை காவல் துறை, பட்டாசு கடைகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

பட்டாசுகளை வெடிக்க நீளமான ஊதுபத்திகளையே பயன்படுத்த வேண்டும் என்றும், பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்கும் முறை குறித்து பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் சென்னை காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், தீ விபத்து போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டால், அவசர உதவிக்கு 100, தீயணைப்புத்துறைக்கு 101, ஆம்புலன்ஸ்க்கு 108 உள்ளிட்ட எண்களை உடனடியாக அழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.