தமிழ்நாடு

இன்று முதல் +1 விடைத்தாள் நகலை பதிவிறக்கம்...மறுமதிப்பீட்டிற்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Tamil Selvi Selvakumar

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மே மாதம் 19 ஆம் தேதி வெளியானது. இதில் மாணவிகள் 94.99 சதவீதமும், மாணவர்கள் 84.86 சதவீதமும், மொத்தம் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் சிலர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர். அந்த  மாணவர்கள், தங்களின்‌ விடைத்தாள்‌ நகலினை இன்று பிற்பகல்‌ முதல் தேர்வர்கள் https://dge.tn.gov.in/  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், அதன் பிறகு மறுகூட்டல்‌ அல்லது மறுமதிப்பீட்டிற்கு (https://dge.tn.gov.in//) இந்த இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மறுமதிப்பீட்டிற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் 505 ரூபாயும், மறுகூட்டலுக்கு உயிரியல்‌ பாடத்திற்கு மட்டும் 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டுமென்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.