தமிழ்நாடு

என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து மறியல்; 100 பேர் கைது!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தி உள்ளது. சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம் கையகப்படுத்திய விளை நிலங்களில் உள்ள பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டும் பணியை கடந்த மாதம் 26 ஆம் தேதி துவக்கியது. விளை நிலங்கள் அழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்பினரும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நேற்று சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. என்எல்சி நிறுவனம் விளை நிலங்களை அழித்ததற்கு கண்டனம் தெரிவித்தும், நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு 3 மடங்கு இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. 

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவரும், கந்தர்வகோட்டை தொகுதி எம்எல்ஏவுமான சின்னதுரை தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் உள்ள சென்னை கும்பகோணம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நடுரோட்டில் அமர்ந்து என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சுமார் 100 பேரும் வாகனங்களில் ஏற்றப்பட்டு தனியார் மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டனர். போராட்டத்தையொட்டி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் அகில இந்திய துணை செயலாளர் ரவீந்திரன், என்எல்சி நிர்வாகத்தை கண்டித்தும் அதற்கு ஆதரவாக செயல்படும் அரசு நிர்வாகத்தை கண்டித்தும் இன்று கடலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தி இருக்கிறோம். விவசாயிகளிடம் கைப்பற்றிய நிலத்திலிருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறார்கள். விவசாய நிலங்களில் பயிர்கள் அழிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் சட்டப்படி 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்பட்டால் அந்த நிலங்களை விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும்.

கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். நிலங்களை கொடுத்தவர்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். பயிர் சேதத்திற்கு 3 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும். சொந்த வீடு கட்டி தர வேண்டும். வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனக் கூறிய அவர், என்எல்சி நிறுவனம் தனது சிஎஸ்ஆர் நிதியை இந்தப் பகுதி மக்களுக்கு முழுமையாக செலவிட வேண்டும் என்றார்.