மேலும் 2019 டிசம்பர் முதல் 2020 ஜனவரி வரை மேகாலயாவின் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்தவர்.
இவர் நியமிக்கப்பட்ட நாள் முதல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுநர் - ஆளுங்கட்சியின் உறவு என்பது எண்ணெய்யும் தண்ணீரையும் போலவே காணப்படுகிறது. அதிலும் ஆர்.என்.ரவியையும் சர்ச்சையையும் நீக்கி விட முடியாது எனும் அளவுக்கு பேசு பொருளாளது.
தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பிய, தற்போது வரை பரபரப்பை தொடர்ந்திருக்க செய்யும் நீட் தேர்வு குறித்த மசோதாவில் இருந்தே ஆளுநர் - தமிழக அரசு இடையே மோதல் போக்கு தொடங்கியது.
நீட் மசோதாவை கிடப்பில் போட்டதால், தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு பதிலடியாக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. அதில் இருந்து ஆளுநர் ரவியும், அரசு விழாக்களில் பங்கேற்று தமிழக அரசு குறித்து விமர்சிப்பதும், சர்ச்சையான கருத்துக்களை கூறுவதுமாய் இருந்தார்.
கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கூட ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை பரப்புவதாக ஆர்.என்.ரவி மீது அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியது. இதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு என்ற பெயரை விட தமிழகம் என்பதே பொருத்தமானதாக இருப்பதாக ரவி கூறியிருந்தார்.
இதற்கு அரசு சார்பில், தமிழ்நாடு என்ற பெயரே பெருமை என பதிலளித்தது. மேலும் கடந்த 50 ஆண்டுகளில் ஆளுங்கட்சிகள் பிற்போக்குத்தனமாக இருப்பதாக கூறியதற்கு தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் விடுத்தது. பின்னர் இந்த கருத்தில் இருந்து பின்வாங்கினார் ஆர்.என்.ரவி.
இதைவிட மேலாக 2023 ஜனவரி மாதத்தில் தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இருந்த பெண்கள் அதிகாரம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, கருணை இவற்றோடு, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சொற்களை பேசுவதற்கு ஆர்.என்.ரவி தவிர்த்தார்.
இதன் காரணமாக சட்டசபையில் அமளி உண்டான நிலையில் திடீரென எழுந்த ஆர்.என்.ரவி, விறுவிறுவென சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இதே போல 2024 பிப்ரவரி மாதத்தில் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தேசிய கீதத்தையும் இசைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.
இதில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி தமிழக அரசு சார்பில் அளித்த உரையை வாசிக்காமல் அமர்ந்தார் ஆர்.என்.ரவி. பின்னர் ஆர்.என்.ரவியின் உரையை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வாசித்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தமிழக முதலமைச்சரை விட தனக்கே அதிகாரம் இருப்பதாக முடிவெடுத்தவர், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.
இதனிடையே சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் வளாகத்திற்கு வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் குண்டு வீசியதாக கூறப்பட்டது. இவ்வாறு ஆர்.என்.ரவியின் பதவி காலத்தில் பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் அணிவகுத்த நிலையில், ஜூலை மாத இறுதியுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைகிறது.
பதவிக்காலம் முடிவடையும் நிலையில் ஆர்.என்.ரவி, பிரதமர் மோடியை சந்தித்து பேச டெல்லி விரைந்தார். 5 நாட்கள் பயணமாக சென்றதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை சார்பில், தமிழ்நாட்டு மக்கள் சேவையில் மோடி அக்கறையுடன் இருப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது.
மேலும் தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுஙகு பிரச்னை குறித்தும் மோடியுடன் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் மோடி மட்டுமல்லாமல் அமித்ஷா, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் சந்தித்து பேசினார்.
இந்த மாத இறுதியுடன் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதையடுத்து தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்பது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த மூத்த தலைவர்கள் யாரேனும் ஆளுநராக நியமிக்கப்படுவார்களா, அல்லது ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.