இந்தியா

உக்ரைனுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு, ஜெலென்ஸ்கி அழைப்பு....!

Malaimurasu Seithigal TV

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை, வளா்ச்சி ஆகியவற்றை உறுதி செய்யும் முக்கியத் தளமாக க்வாட் கூட்டமைப்பு மாறியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஹிரோஷிமா நகரில் ஜி7 மாநாடு நிறைவடைந்த பிறகு, க்வாட் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் பைடன், ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி, ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா ஆகியோா் பங்கேற்றனா். 

அப்போது பேசிய பிரதமர் மோடிபேசுகையில்,  ‘இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை, வளா்ச்சி ஆகியவற்றை உறுதி செய்யும் முக்கியத் தளமாக க்வாட் கூட்டமைப்பு மாறியுள்ளது என்றார். அதோடு, ஆக்கபூா்வமான திட்டத்தின் அடிப்படையில் ஜனநாயக கொள்கைகளை மையமாகக் கொண்டு க்வாட் கூட்டமைப்பு முன்னேறி வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பானது ஒட்டுமொத்த உலகத்துக்குமே மிகவும் முக்கியமானது எனவும்  கூறினார். 

மேலும் அந்தப் பிராந்தியமானது வெளிப்படைத்தன்மையுடனும் சுதந்திரமாகவும் திகழ்வதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை க்வாட் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.  மக்கள் நலன், அமைதி, வளா்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு க்வாட் தொடா்ந்து செயல்படும் என்றும் கூறினார்.

முன்னதாக ஜி-7 மாநாட்டின் ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி முதன்முறையாக சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் போரை அரசியலாக மட்டும் கருதவில்லை எனவும் இதனை மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும் எனவும் கூறினார். 

மேலும், போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்றும் கூறினார். அப்போது போரில் உக்ரைனுக்கு ஆதரவளிக்குமாறு பிரதமா் மோடியிடம் ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டாா். பின்னர் 
உக்ரைனுக்கு வருமாறு  பிரதமர் மோடிக்கு, ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்ததாகவும்  தகவல் வெளியாகி உள்ளது.