இந்தியா

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா; கனிமொழியை பேசவிடாத பாஜக எம்.பி.கள்; கட்டுப்படுத்தாத சபாநாயகர்!

Tamil Selvi Selvakumar

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கூடிய மசோதா மீதான விவதத்தின் போது திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியை பேச விடாமல் கூச்சலிட்டனர். 

நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் முறையாக சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் முதல் சட்ட மசோதாவாக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடிய மசோதாவை மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வாலால் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, இதுத் தொடர்பான விவாதங்கள் இன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதங்கள் தொடங்கின. அப்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மசோதாவை ஆதரித்து பேசத்தொடங்கினார். ஆனால் அவரை பேச விடாமல் பாஜக உறுப்பினர்கள் பலரும் தொடர்ந்து கூச்சல் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனை பார்த்த தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் சுப்ரியா சூலே பாஜக உறுப்பினர்களை கட்டுப்படுத்துமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அப்போதும் அவர்களை சபாநாயகர் கட்டுப்படுத்தவோ அமரச்சொல்லாவோ  இல்லை. அப்போது திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, "நீங்கள் ஏன் கூச்சலிடுகிறீர்கள்? நீங்கள் என்ன கூச்சலிட்டலாலும் அது எனக்கு புரியப்போவதில்லை" என கூறினார். அப்போது பாஜகவினர் கூச்சலிடுவதை நிறுத்தாததால்,இந்தியா கூட்டணி மக்களைவை உறுப்பினர்கள் பலரும் இதுதான் பாஜக மகளிருக்கு அளிக்கும் மரியாதையா என கேள்வி எழுப்பினர். 

இதனையடுத்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுந்து பாஜக மக்களவை உறுப்பினர்களை அமைதிபடுத்தி அமரச்சொன்னார். பின்னர் திமுக எம்பி கனிமொழி நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையில் மகளிருக்கான மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை ஆதரித்து பேசினார். மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை மகளிர் ஒருவர் ஆதரித்து பேசுவதை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் கூச்சலிட்டதும் அதனை சபாநாயகர் தடுக்க முயலாததும் நாடாளுமன்றத்தின் பிற உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.