இந்தியா

யுபிஎஸ்சி தேர்வில் முதல் நான்கு இடங்களிலும் பெண்கள்...!!!

Malaimurasu Seithigal TV

ஒழுக்கமும் நேர்மையுமே சாதிக்கக் காரணம் என யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த உத்தரப்பிரதேச மாணவி இஷிதா கிஷோர் தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டிற்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இறுதி முடிவுகள் இன்று வெளியாகின. இந்நிலையில் நாடு முழுவதும் 180 ஐ.ஏ.எஸ், 200 ஐ.பி.எஸ் உள்ளிட்ட ஆயிரத்து 22 இடங்களுக்கு நடைபெற்ற தேர்வில், 933 பேர் தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தேசிய அளவில் இஷிதா கிஷோர் முதலிடத்தையும், கரிமா லோஹியா 2வது இடத்தையும், உமா ஹராதி 3வது இடத்தையும் ஸ்மிருதி மிஸ்ரா 4வது இடத்தையும் என, முதல் 4 இடங்களையும் மாணவிகள் கைப்பற்றி அசத்தியுள்ளனர். 

முதல் முயற்சியிலேயே தேசிய அளவில் 107வது இடம் பிடித்த சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி, தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.  இந்த நிலையில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த இஷிதா கிஷோர், நொய்டாவில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினார். தான் சாதிக்க ஒழுக்கம், நேர்மையுடன் பாடுபட்டதே காரணம் எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.