இந்தியா

"மேற்குவங்கம், ராஜஸ்தானை மணிப்பூர் நிலையுடன் ஒப்பிடக்கூடாது"  உச்சநீதிமன்றம் காட்டம்!

Malaimurasu Seithigal TV

மேற்குவங்கம், ராஜஸ்தானை மணிப்பூர் நிலையுடன் ஒப்பிடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்பாலுக்கு அருகே கடந்த மே 4ம் தேதி குகி பழங்குடியினப் பெண்கள் இருவரை நிர்வாணமாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை பதிவு செய்ய 14 நாட்களை போலீசார் எடுத்துக் கொண்டது ஏன்? எனவும் மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலை என்ன? எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

இந்த சம்பவத்தில் போலீசாரே கொடூரத்திற்கு துணைசென்று குடும்பத்தினரைக் கொல்ல அனுமதித்ததாக மனுதாரர் தரப்பில் ஆஜராகிய கபில்சிபல் தெரிவித்தார். இதனை உள்வாங்கிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உண்மையைக் கூட மணிப்பூர் அரசு திரித்துக் கூறுவதாக கண்டிப்புடன் கூறினார். நிர்பயா வழக்கை விட மோசமான முறையில் மணிப்பூர் விவகாரம் கையாளப்பட்டுள்ளதாகவும் மாநிலம் முழுவதும் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 6 ஆயிரம் வழக்குகளை முறையாக வரைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

வழக்கில் CBI தலையிட்டது பாதிக்கப்பட்ட பெண்களின் நம்பிக்கையை குறைமதிப்புக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவித்த நீதிமன்றம், அரசியலமைப்பின் நம்பிக்கையை மணிப்பூரில் மீட்டெடுக்க வேண்டியதே தற்போதைய கடமைகளில் முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டியது.

மேற்குவங்கம், ராஜஸ்தானில் நடைபெறுவதைக் கூறி, மணிப்பூர் நிலையை மத்திய அரசு நியாயப்படுத்தக் கூடாது எனவும் ஒருபோதும் அதனை மன்னிக்க முடியாது எனவும் நீதிபதிகள் கடுமையாக தெரிவித்தனர். மணிப்பூர் கொடூர வழக்கை மிக மோசமான முறையில் மத்திய மாநில அரசுகள் கையாண்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டு வாசலைத் தேடி நீதி சென்றடைய வேண்டும் என தெரிவித்து, வழக்கை நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.