இந்தியா

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல்; ஆளுநரை வழிமறித்த மார்க்சிஸ்ட் கட்சியினர்!

Malaimurasu Seithigal TV

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிக்கு சென்ற ஆளுநர் சி.வி.ஆனந்த போஸை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்படுத்தியது.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 63 ஆயிரத்து 229 கிராம பஞ்சாயத்து இடங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் சுமார் 5 கோடியே 67 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.  நந்திகிராம் உள்ளிட்ட பகுதிகளில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் கொட்டும் மழையிலும் ஏராளமான பொதுமக்கள் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

இதில், கூச் பிஹார் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் அந்த பகுதியில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இதேபோல், முர்ஷிதாபாத் பகுதியில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அப்பகுதியிலும் பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் பாஷூதேப்பூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற ஆளுநர் சி.வி.ஆனந்த போஸை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்படுத்தியது. முன்னதாக ஆளுநர் உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி படுத்தும் விதமாக ஆளுநர் வாக்கு சாவடிகளை பார்வையிட இருப்பதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.