நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் பிற்பகல் 3 மணி வரை, மேகாலயாவில் 63 புள்ளி 91 சதவீதமும், நாகாலாந்தில் 72 புள்ளி 99 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ‘ஏழு சகோதரிகள்’ என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்கள் சட்டசபை தேர்தலை காண்கின்றன. அதில் திரிபுரா மாநிலம் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி தேர்தலை சந்தித்தது. அதனைத்தொடர்ந்து, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
அதன்படி, மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில், சோகியாங் தொகுதி தவிர்த்து மீதமுள்ள 59 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதேபோல் நாகாலாந்தில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்த இரண்டு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி மேகாலயாவில் 12.1 சதவீதமும், நாகாலாந்தில் 15.8 சதவீத வாக்குகளும், காலை 11 மணி நிலவரப்படி, மேகாலயாவில் 26.70 சதவீதமும், நாகாலாந்தில் 35.76 சதவீத வாக்குகளும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி, மேகாலயாவில் 44.73 சதவீதமும், நாகாலாந்தில் 57. 06 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, மேகாலயாவில் 63.91 சதவீதமும், நாகாலாந்தில் 72.99 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.