ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டபேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி முதல் கட்டமாக பாம்போர், டிரால், புல்வாமா, ராஜ்போரா, ஜைனபோரா, சோபியான், குல்காம், தூரு, அனந்த்நாக் மேற்கு, அனந்த்நாக் உள்ளிட்ட 24 தொகுதிகளுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 16 தொகுதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் உள்ளன.
பல்வேறு தொகுதிகளில் அமைதியான முறையான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி, 58.2 சதவீதம் வாக்குகள் பதிவானது. மாலை 6 மணியுடன் தேர்தல் நிறைவடைந்த நிலையில், முன்கூட்டியே வாக்குச்சாவடிகளுக்கு வந்த மக்களுக்கு மட்டும் வாக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2014 சட்டபேரவைத் தேர்தலின்போது மொத்தம் 87 தொகுதிகள் இருந்தன. இதில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரசுக்கு 12 இடங்களும் கிடைத்தன. இந்த முறை தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரசும் கூட்டாக களம் காண்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.