இ-ஆபீஸ் முறை அமலுக்கு வருவதன் மூலம் பணிகள் விரைவாக முடிவடைந்து, அனைத்துப் பணிகளும் காகிதமில்லாமல் செய்யப்படும். அனைத்து அலுவலகங்களும் இ-ஆபீஸ் முறையில் வந்த பிறகு, அதிகாரிகள் அனைத்து கோப்புகள் மற்றும் ஆவணங்களை மொபைலில் பார்க்க முடியும்.
டிஜிட்டல் மயம்:
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களையும் டிஜிட்டல் மயமாக்கப் போவதாக அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 1, 2013 முதல், மாநிலத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் இ-ஆபீஸ் முறை அமல்படுத்தப்படும் எனவும் அனைத்துப் பணிகளும் காகிதமில்லாமல் நடைபெறுவதால் பணிகளை விரைவுபடுத்த முடியும் என்றும் கூறியுள்ளார் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே.
இரண்டிலிருந்து ஒன்று:
முதலமைச்சர் அலுவலகம்(சிஎம்ஓ) சார்பில், நல்லாட்சி கையேடு தயாரிப்பதற்கு நிர்வாகத்துடன் ஒத்துழைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தற்போது நல்லாட்சி குறியீட்டில் இரண்டாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிராவை முதல் இடத்தைப் பெற வைப்பதே இலக்காகக் கொள்ள வேண்டும் என்று சிஎம்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காகிதமில்லா இந்தியா:
அனைத்து அரசு துறைகளையும் காகிதம் இல்லாத துறையாக மாற்ற மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு அக்டோபரில், இந்திய ரயில்வேயை 100 சதவீதம் காகிதம் இல்லாததாக மாற்றும் வகையில், காகித விரயத்தை குறைக்கும் வகையில், சிறப்பு பிரச்சாரத்தை அரசு மேற்கொண்டுள்ளது.
-நப்பசலையார்