இந்தியா

தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார் திரிணாமுல் காங்.உறுப்பினர் டெரெக் ஓ பிரெய்ன்!

Tamil Selvi Selvakumar

பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் மக்களவையில் தொடங்கிய நிலையில்,  மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் டெரெக் ஓ பிரெய்ன் அமளியில் ஈடுபட்டதால் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை மாதம் 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதற்கு மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா ஒப்புதல் அளித்ததை அடுத்து, இன்று முதல் 3 நாட்கள் இதன்மீது விவாதம் நடைபெறும் என அறிவித்தார்.

இதேபோல் மாநிலங்களவையில் அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இருக்கை அருகே சென்ற காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்கக் கோரி கூச்சல் எழுப்பினர். 

அப்போது, 267 சட்டத்தின்கீழ் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் டெரெக் ஓ பிரெய்ன் அமளியில் ஈடுபட்டார். அவைத் தலைவரின் அறிவுறுத்தலையும் மீறி தொடர்ந்து குரல் எழுப்பியதால் அவரை இந்த தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதாக அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார். இதனையடுத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.