இந்தியா

வகுப்பறைகளாக மாற்றப்பட்ட கழிவறைகள்....!!!!! டெல்லியில் தொடரும் ஊழல் குற்றசாட்டுகள்....!!

Malaimurasu Seithigal TV

மத்திய பொதுப் பணித்துறையின் வழிகாட்டுதல்களைப் புறக்கணித்து பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதற்கான பட்ஜெட்டை டெல்லி அரசாங்கம் உயர்த்தியுள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

’பணப்பறி’ மாதிரி:

டெல்லி அரசாங்கத்திற்கு 2020ல் மத்திய விஜிலென்ஸ் துறை அனுப்பிய அறிக்கையை மேற்கோள்காட்டி குற்றசாட்டை முன்வைத்துள்ளது.

டெல்லி அரசாங்கம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட டெண்டர் தொகையை விட 53 சதவீதம் தொகையை அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது பாஜக.

பள்ளியில் வகுப்பறைகளை கட்டுவதாக கூறி கழிவறைகளை பள்ளிகளின் வகுப்பறைகளாக கணக்கு காட்டி வருவதாக பாஜக விமர்சித்துள்ளது.  டெல்லி கல்வி முன்மாதிரி மாநிலம் இல்லை எனவும் அது பணப்பறி மாதிரி மாநிலம் எனவும் பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

ஊழல் நிறைந்த டி.என்.ஏ:

அரவிந்த் கெஜ்ரிவாலின் டி. என். ஏ விலேயே ஊழல் நிறைந்துள்ளது.  டெல்லியில் நடப்பது ஆம் ஆத்மி அரசாங்கம் அல்ல; பாவங்களின் அரசாங்கம்.  கெஜ்ரிவலும் சிசோடியாவும் ஊழல் வல்லுநர்கள்.  கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போனது? உங்கள் பாக்கெட்டில் போனதா?  அறிக்கையை கவனத்தில் கொண்டீர்களா?  அதற்காக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?”  என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக செய்தி தொடர்பாளர் கௌரவ் பாட்டியா.

நிச்சயம் தண்டனை:

மேலும் “ நீங்களும் உங்கள் ஊழல் அமைச்சர்களும் நாட்டின் சட்டப்படி தண்டிக்கப்படுவீர்கள்.  உங்களை நிச்சயம் தப்பிக்க விட மாட்டோம்” எனவும் பாட்டியா கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு:

மத்திய விஜிலென்ஸ்-ன் அறிக்கையை மேற்கோள் காட்டி,  6,133 வகுப்பறைகள் கட்டப்படுவதற்கு பதிலாக  4,027 வகுப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன என்று பாட்டியா கூறியுள்ளார்.

ஆதாரங்களின்படி, 194 பள்ளிகளில் 160 கழிப்பறைகள் தேவைப்பட்ட நிலையில் 1,214 கழிப்பறைகள் சுமார் 37 கோடி ரூபாய் கூடுதல் செலவில் கட்டப்பட்டுள்ளன.

இந்த திட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை ரூ.989.26 கோடி எனவும் அனைத்து டெண்டர்களின் மதிப்பு ரூ.860.63 கோடி எனவும் பாட்டியா கூறியுள்ளார்.  இருப்பினும், உண்மையான செலவு ரூ.1,315.57 கோடியாக உயர்ந்துள்ளது என்று பாட்டியா தெரிவித்துள்ளார்.

"இது ஒரு தீவிரமான பிரச்சினை... கல்விக் கோவில்களைக் கூட நீங்கள் விட்டுவைக்கவில்லை. கெஜ்ரிவால் அரசு தொடர் ஊழலை நடத்துகிறது," என்றும் பாட்டியா கூறியுள்ளார்.